Tuesday, December 23, 2008

இன்று தந்தை பெரியார் நினைவு நாள்


பெரியார் மேடையில் பேசிய சில துளி...

நான் யார்?
எனது குடும்பம் ஒரு வைதீகக் குடும்ப-மாகும்; குடும்பத்தில் எவ்வளவோ கோயில் கட்டுதல், சத்திரம் கட்டுதல், அன்னதானம் செய்தல் முதலிய பல காரியங்கள் செய்திருப்-பதோடு, இந்தத் தர்மங்களுக்குச் சொத்துக்-களும் எழுதி வைத்திருக்கிறார்கள் என்றபோதிலும், அப்படிப்பட்ட குடும்பத்தில் பிறந்த நான் இன்று பல மக்களால் ஒரு புரட்சிக்காரனென்றும், தீவிரக் கிளர்ச்சி செய்கிறவன் என்றும் சொல்லப்படுகிறேன். காரணம் என்னவென்றால், நம்முடைய கீழ்மை நிலைமைக்குக் காரணமாய் இருக்கும் அடிப்-படையில் நான் கை வைப்பதால்தான். அது என்னவெனில், எவ்வளவு காலத்திற்கு நாம் இந்து மதத்தையும், இந்துக் கடவுள்களையும், இந்து சாஸ்திரம், புராணம் வேதம், இதிகாசம் முதலியவகைளயும் நம்பிப் பின்பற்றிக் கொண்டு இருக்கிறோமோ, அதுவரையில் - நாம் தாழ்த்தப்பட்டவர்களாகவும், பிற்படுத்தப்-பட்டர்களாகவும், சம உரிமைக்கு அருகதை அற்றவர்களாகவும் இருப்பதிலிருந்து தப்பித்துக் கொள்ள முடியவே முடியாது. அம்மாதிரி, அவைகளில் இருந்து வெளி-யேறாமல், அவைகளை நம்பிப் பின்பற்றி நடந்து வந்தவர்களில் ஒருவராவது - அவர்கள் வேறு வழிகளில் எவ்வளவு முயற்சித்-தவர்களாய் இருந்தாலும், எவ்வளவு பெரியவர்களாகி இருந்தாலும் - அவர்களுக்கு ஏற்பட்ட இழிவிலிருந்து தப்பித்துக் கொண்ட-வர்கள் எவருமே இலர் என்பதை ஒவ்வொரு சீர்திருத்தவாதி என்பவனும் நன்றாக உணரவேண்டும் என்று சொல்லி வருகிறேன்.
(கான்பூரில் 29, 30, 31.12.1944இல் சொற்பொழிவு, குடிஅரசு, 13.1.1945)

நான் எப்படி?
நான் ஒரு சுதந்திர மனிதன்; எனக்குச் சுதந்திர நினைப்பு, சுதந்திர அனுபவம், சுதந்திர உணர்ச்சி உண்டு. அதை உங்கள் முன் சமர்ப்பிக்கிறேன். நீங்கள் என்னைப் போலவே உங்களது சுதந்திர நினைப்பு, அனுபவம் உணர்ச்சி ஆகியவை-களால் பரிசீலனை செய்து, ஒப்புக்கூடிய-வைகளை ஒப்பி, தள்ளக் கூடியவைகளைத் தள்ளிவிடுங்கள் என்கின்ற நிபந்தனையின் பேரிலேதான் எதையும் தெரிவிக்கிறேன். எப்படிப்பட்ட பழமை விரும்பிகளாலும் இதற்கு இடம் கொடுக்க வில்லையானால் அது நியாயமும் ஒழுங்குமாகாது.
(திருப்பூரில் சொற்பொழிவு, புரட்சி, 17.12.1933)

சொல்வது கட்டளையா?
நான் சொல்வன எல்லாம் எனது சொந்த அபிப்பிராயங்கள்தாம் என்று சொல்வதோடு, நான் ஒரு சாதாரண மனிதன்தான். நான் எவ்விதத் தன்மையும் பொருந்திய ஒரு தீர்க்கதரிசியல்லன். ஆகையால், தனி மனிதன் என்கின்ற முறையில்தான் என்னுடைய அபிப்பிராயங்களையும் - நான் பார்த்தும் ஆராய்ச்சி செய்தும் அனுபவத்தில் அறிந்தது-மானவைகளைத்தான் - அதிலும் எனக்குச் சரி என்று பட்டதைத்தான் உரைக்கின்றேன். ஒரு பெரியார் உரைத்துவிட்டார் என நீங்கள் கருதி அப்படியே அவைகளைக் கேட்டு நம்பிவிடு-வீர்களானால், அப்பொழுது - நீங்கள் யாவரும் அடிமைகளே! நான் உரைப்பதை நீங்கள் நம்பாவிட்டால், பாவம் என்றாவது, தோஷம் என்றாவது அல்லது நரகத்துக்குத்-தான் போவீர்கள் என்றாவது சொல்லிப் பயமுறுத்தவில்லை. யார் உரைப்பதையும் நாம் கேட்டு, வேத வாக்கு என அப்படியே நம்பிவிட்டதனால்தான் நாம் இன்று அடிமைகளாக இருக்கின்றோம்.ஆகவே, நான் உரைப்பவைகளை ஆராய்ந்து பாருங்கள்! உங்களுக்கு அவைகள் உண்மை-யென்று தோன்றினால் அவைகளை ஒப்புக் கொள்ளுங்கள்; இல்லாவிட்டால் தள்ளி விடுங்கள். உண்மையெனப் புலப்படுமாகில், அவைகளை உண்மையென ஒப்புக் கொள்வ-தில் மட்டும் பிரயோசனம் இல்லை; அவைகளை அனுஷ்டானத்தில் கொண்டு வந்து அதன்படி நடக்க முயற்சியுங்கள். எனது சொநத் அனுபவங்களை நானறிந்து உங்களுக்கு உரைப்பதுதான் என்னுடைய விடுதலை. அவைகளை ஆராய்ந்து அறிவது, அதன்படி நடப்பதுதான் உங்கள் விடுதலை.
(விடுதலை, கட்டுரை 8.10.1951)

என் துணிவு
நான் ஒரு அதிசயமான மனிதன்; மகான்! அப்படி, இப்படி! என்றெல்லாம் கூறுபவன் அல்லன்; ஆனால், துணிவு உடையவன்; கண்டதை ஆராய்ந்து, அறிந்ததைத் துணிந்து அப்படியே கூறுபவன். மற்றவர்கள் - சுயநலத்துக்காக, சுயநலத்துடன் பாடுபடு-கின்றார்கள்; அந்தச் சுயநல உணர்ச்சியுள்ள-வர்கள் மக்கள் வெறுப்புக்கு ஆளாக மாட்டார்-கள்; அப்படிப் பக்குவமாக நடந்து கொள்வார்கள்.நான் கண்டதை - அறிந்ததை மக்கள் எதிர்ப்பு-க்கு அஞ்சாது கூறுபவன்; மக்கள் எதிர்ப்புக்கு அஞ்சாது கூறினால் வெறுப்புத்தான் கிடைக்கும்; சுயநலம் கெட்டுப்போகும்.
(சாமிமலையில், 24.1.1960இல் சொற்பொழிவு, விடுதலை, 31.1.1960)

நான் ஒரு தொண்டன்
நான் ஒரு பிறவித் தொண்டன்; தொண்டி-லேயே தான் எனது உற்சாகமும் ஆசையும் இருந்து வருகிறது. தலைமைத் தன்மை எனக்குத் தெரியாது. தலைவனாக இருப்பது என்பது, எனக்கு இஷ்டமில்லாததும் எனக்குத் தொல்லையானதுமான காரியம். ஏதோ சில நெருக்கடியை உத்தேசித்தும், எனது உண்மைத் தோழரும் கூட்டுப் பொறுப்பாளருமான சிலரின் அபிப்பிராயத்தையும் வேண்டு-கோளையும் மறுக்க முடியாமலும் தலைமைப் பதவியை ஏற்றுக் கொண்டிருக்கிறேனே யொழிய, இதில் எனக்கு மனச் சாந்தியோ, உற்சாகமோ இல்லை. இருந்தாலும் என் இயற்கைக்கும், சக்திக்கும் தக்கபடி நான் நடந்து வருகிறேன் என்றாலும் அதன் மூலம் எல்லோரையும் திருப்தி செய்ய முடியவில்லை.
(சென்னை கன்னிமரா ஓட்டலில், 6.10.1940இல் சொற்பொழிவு, குடிஅரசு, 13.10.1940)

1 comment:

Thamizhan said...

என்னதான் சிக்கன்மாகச் செலவு செய்தாலும் எனக்கு மட்டுமே தினம் 18ரூபாய் போல செலவாகிவிடுகிறது.
அது மக்கள் பணம்,அதற்கு உழைக்க வேண்டாமா?
வயதாகி விட்டது,ஓய்வெடுத்துக் கொள்ளுங்கள் என்று பெரிய நண்பர்கள் வேண்டிய போது!