Monday, August 25, 2008

மாவோவின் நீண்ட பயணம்

ரஷ்யாவில் புரட்சி வெற்றி பெற்று கம்யூனிஸ்டுகள் ஆட்சியைக் கைப்பற்றிய நேரம். சீனாவிலும் கம்யூனிஸ்டுகள் அசுர வளர்ச்சி அடைந்து வந்தனர். கம்யூனிஸ்டுகளை ஒடுக்கினால் தான் தான் ஆட்சி செய்ய முடியும் என்று நினைத்த ஆட்சியாளன் ஷியாங் கட்சியைத் தடை செய்தான். கம்யூனிஸ்டுகளை நாட்டை விட்டே விரட்டினான். தொடர்ந்து கம்யூனிஸ்டுகள் செய்த புரட்சிகள் தோல்வியடைந்தன. இதற்கான காரணத்தைக் கண்டறிய ஒரு மகத்தான மனிதன் அங்கே வர வேண்டியிருந்தது.




அவர் மாவோ என்றழைக்கப்பட்ட தலைவர் மாசேதுங். அவர் புரட்சியின் தோல்வியை எளிதாகக் கண்டுபிடித்தார். ரஷ்யாவில் புரட்சி வெற்றி பெற்றதற்கு தொழிலாளர்கள் எழுச்சி பெரிய காரணமாக இருந்தது. ஆனால் சீனா தொழில் சார்ந்த நாடு இல்லை, விவசாயம் சார்ந்த நாடு.


சீனாவில் புரட்சி வெற்றி பெற வேண்டுமானால் விவசாயிகளிடம் எழுச்சி வரவேண்டும் என்று மாவோ உறுதியாக நம்பினார். அப்போது கொடூர ஆட்சியாளர்களிடம் சிக்கி நிலத்தில் விளைவது அனைத்தையும் விவசாயிகள் ஆட்சியாளர்களிடம் வரியாக செலுத்திக் கொண்டிருந்தனர். ஆட்சியாளர்களுக்கு எதிரான மாவோவின் கம்பீரமான குரல் விவசாயிகளை கம்யூனிஸ்டு இயக்கத்தில் எளிதாக சேர்த்தது.


ஆட்சியாளர்களுக்கு எதிராக மக்களைத் திரட்டிய மாவோ அவர்களை வைத்தே ‘சிவப்பு ராணுவம்’ என்ற கொரில்லா அமைப்பை உருவாக்கினார். இந்த ராணுவத்தை ஒடுக்க ஷியாங் அரசு துப்பாக்கி, தோட்டா போன்ற ஆயுதங்களுடன் ஒரு லட்சம் பேர் கொண்ட ராணுவத்தை அனுப்பியது. ஷியாங்கின் ராணுவம் மாவோவின் உறுதியான சிவப்பு படையிடம் அவமானகரமான தோல்வியைத் தழுவியது.


வெறிகொண்ட ஷியாங் எட்டு லட்சம் வீரர்கள் கொண்ட ராணுவத்தை அனுப்பினான். இந்த முறை பின்வாங்குவதைத் தவிர மாவோவுக்கு வேறு வழி இருக்கவில்லை. விவசாயிகளை ஷியாங் அரசிடம் சிக்க வைக்க மனமின்றி அவர்களையும், அவர்கள் குடும்பங்களையும் அழைத்துக் கொண்டு கொரில்லாப் படை தப்பியோடியது.


இவர்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்தைத் தாண்டியது. காடுகள், ஆறுகள், குளிர் என ஆபத்துகளைத் தாண்டி இவர்கள் ஓடினர். இவர்களை அரசின் ராணுவம் தொடர்ந்து துரத்தி வந்து தாக்கியது. ஆறுகளின் குறுக்கே இருந்த பாலங்களைத் தகர்த்தது. விவசாயிகள், குழந்தைகள், பெண்கள் என அனைவரும் இலக்கின்றி நாட்களைக் கடந்து ஓடிக்கொண்டே இருந்தனர். இவர்கள் ஓடிய தூரம் சுமார் 12 ஆயிரம் கிலோ மீட்டர்கள்.


ஒரு வருட தொடர் ஓட்டத்திற்குப் பிறகு உயிர் பிழைத்தவர்களின் எண்ணிக்கை வெறும் ஐந்தாயிரம் மட்டுமே. இந்த கொடூர ஓட்டத்தில் மாசேதுங்கின் இரண்டு குழந்தைகளும், ஒரு சகோதரரும் பலியானார்கள். இந்த மன உறுதி மிக்க ஓட்டம் சீன மக்களை கம்யூனிஸ்டுகளாக்கியது. மாவோ சீனாவின் மகத்தான தலைவராக உருமாறினார். சுமார் பதினைந்து ஆண்டுகளுக்குப் பின் அவர் சீனாவில் ஆட்சியைக் கைப்பற்ற காரணமாக இருந்த அந்த ஓட்டத்தை ‘மாவோவின் நீண்ட பயணம்’ என வரலாறு குறிப்பிடுகிறது.

No comments: