Wednesday, August 27, 2008

ஆளுமை என்னும் முகமூடி

ஆளுமை என்றால் என்ன?
ஆளுமை என்ற தமிழ்ச் சொல்லாகட்டும் Personality என்ற ஆங்கிலச் சொல்லாகட்டும் இரண்டிலுமே ‘ஆள்’ - ‘person’ என்ற சொல் அடங்கி இருக்கிறது. ‘persona’ என்ற சொல்லு-க்கு முகமூடி என்று பொருள். கிரேக்க நாடகங்களில் கதாபாத்திரத்தின் தன்மைக்கேற்ற முகமூடியை அணிந்து நடிப்பார்கள். நிஜ வாழ்க்கையில் நாம் எந்த முகமூடியை அணிந்திருக்கிறோம் என்பதைக் குறிப்பதுதான் ஆளுமை என்பது.
ஆளுமை வளர்ச்சி:
ஒரு மனிதனின் ஆளுமை அவன் வாழும் சூழ்நிலைக் கூறுகளாலும் மரபு வழி காரணிகளாலும் நிலைப்படுத்தப்படுகிறது. அதாவது அவனது குடும்பம், தொழில், செய்யும் இடம், படிக்கும் அல்லது படித்த பள்ளியின் சூழ்நிலை, சமுதாயம், மற்றும் கலாச்சாரம் முதலியவை ஆளுமை வளர்வதற்கு பெரிதும் காரணமாக இருக்கின்றன.இந்த இந்த ஆளுமைத்தன்மைகள் மரபு வழியாக வருகிறது; இந்த இந்த ஆளுமைத்-தன்மைகள் சூழ்நிலைக் காரணமாக வருகிறது என்று அறுதியிட்டுக் கூற முடிவதில்லை.வளரும் நிலையில் அல்லது வளர்ந்துவிட்ட நிலையில் பொதுவாகச் சமுதாயம் எதிர்-பார்க்கும் அல்லது மிக விரும்பும் தனி மனித நடத்தைகளில் சிலவற்றை பார்ப்போம்.
ஒழுக்கம்:
ஓழுக்கம் என்பது ஏதோ அசாத்தியமான செயல்களைச் செய்வதல்ல. சாதாரண செயல்களையே சிறப்பான முறையில் செய்வது, ஒழுக்கத்தை கடைப்பிடிப்பதால் என்ன பயன்? அது நம் உள்ளுணர்வுகளை ஒழுங்குபடுத்து-வதோடு திடீரென வரும் இன்னல்களை சமாளிக்கும் உறுதியைக் கொடுக்கும். ஒரு செயலைக் கடைசிவரை முயன்று செய்து முடிக்கும் ஆற்றலைக் கொடுக்கும். துன்பம் நம்மை அலைக்கழிக்க முடியாது.
ஒரு குறிக்கோளைத் தொடங்கும் முன், நன்கு முன் தயாரிப்பு செய்து கொள்வதும், இடை நிறுத்தம் செய்யாமல் இலக்கை அடைவதும், ஒழுக்க நடத்தையுள்ளவர்களால் மட்டுமே சாத்தியமாகிறது.ஒவ்வொரு வெற்றி முகமூடி அணிந்துள்ள-வரின் பின்னாலும் ஒழுக்கம் நிச்சயம் முக்கிய இடத்திலிருக்கும்.
உரையாடல் திறன்:
அடிக்கடி சந்திக்கின்ற நண்பர்களாக இருந்தாலும் எப்போதேனும் சந்திக்கின்ற நபராக இருந்தாலும் உற்சாகமான உரை-யாடலைத் தான் ஒவ்வொரு தனி மனிதனும் விரும்புகிறான். ஆனால் நடப்பது என்ன? பலபேர் எப்போது சந்தித்தாலும் தன்னுடைய குறைகளையும் கஷ்டங்களையுமே பேசிக் கொண்டிருப்பார்கள். அல்லது அடுத்தவன் பணமும் வசதியும் உள்ளவனாக இருக்கிறான் என்பதைப் பற்றி புழுங்கிக் கொண்டிருப்-பார்கள். எதிரில் உள்ளவர் உற்சாகமான மனநிலையில் இருந்தாலும் சற்று நேரத்தில் அவர் சேர்ந்துபோய் எதையோ பறிகொடுத்த-வர் போலாகிவிடுவார்.
எப்படி இருக்கிறீர்கள்?ஏதோ இருக்கிறேன்வியாபாம் எப்படி நடக்கிறது?ஏதோ போய்க்கிட்டிருக்குஏன் வருமானம் சரியில்லையா?ஹூம் அவனவன் நாலஞ்சு வீடு, கார் கடை கண்ணி என்றிருக்கிறான். நாம...இந்த ரீதியில் ஒரு மணி நேரம் என்ன - ஒரு நாளெல்லாம் கூட பேசுபவர்கள் இருக்-கிறார்கள்.தான் இருக்கும் இடத்தை கலகலப்பாக்கி நகைச்சுவை ததும்ப தன்னம்பிக்கையுடன் பேசிக் கொண்டிருப்பவரை தேடிப்பிடித்து நண்பராக்கிக் கொள்ளலாம்.
அக்பர், பீர்பாலை நோக்கி எரிச்சலுடன் கேட்டார். ஆரம்பத்தில் அறிவாளியாகத்தானே இருந்தீர் கள்; வரவர முட்டாளாகி விட்டீர்களே! ஏன்?அதற்கு பீர்பால், எல்லாம் உங்களுடன் பழகியதால் தான் என்றாராம் அமைதியாக.ஒருவர் கேட்டார்.உங்கள் அலுவலகத்தில் மொத்தம் எவ்வளவு பேர் வேலை செய்கிறார்கள்?பாதி பேர்தான் என்றார் அலுவலக மேலாளர்.
தன்னை உணர்தல்:
நம்முடைய நோக்கம் அடைய விரும்பும் இலக்கு ஆகியவற்றை நிர்ணயிக்கும் முன்பு நம்மைப் பற்றிய மதிப்பீடு முக்கியம். நம்முடைய கல்வி, செல்வநிலை ஆகியவற்றை கருத்தில் கொண்டு இலக்கை எவ்வளவு தூரத்தில் வைக்க வேண்டும் என்று கணிக்க வேண்டும்.எழுத்தாளராக விரும்பும் ஒருவர் முதலில் சிறுகதை, துணுக்குகள் ஆகியவற்றை எழுதிப் பழக வேண்டும். பிறகு மாதம் ஒரு கட்டுரை என்று முயற்சி செய்யலாம். பின்னர்தான் புதினம் எழுத முயற்சிக்க வேண்டும்.
ஒரு வியாபாரம் அல்லது தொழில் செய்ய முற்படும் போதுகூட அனுபவம் முதலீடு வியாபார வாய்ப்பு ஆகியவற்றை மிகக் கவனத்துடன் புரிந்து செயல்பட வேண்டும். மலைகளை பெயர்க்கும் நம்பிக்கை என்று ஒன்று இருக்குமானால் அது சுய சக்தியில் கொள்ளும் நம்பிக்கைதான் - மாரி எப்னர் - எஷன்பாக. கடுகளவு முயற்சியைச் செய்துவிட்டு மலையளவு சாதனை நிகழ்த்திவிட முடியாது.
நல்ல விஷயங்களை அடைய அதிர்ஷ்டம் வேண்டும் அதெல்லாம் நமக்கு இல்லை என்று தாழ்வு மனப்பான்மையில் வாழ்பவர் பலர். நாம் மற்றவர்களுக்கு ஈடானவர்களல்ல நம்மால் எதையும் சாதிக்க முடியாது, பலமற்ற நம்மால் எதையும் சாதிக்க முடியாது என்னும் சிந்தனைகளால் ஒட்டுமொத்த வாழ்க்கைத் தரமும் குறைந்து செயல்திறன் குன்றிவிடும். என்ன நடந்தாலும் சரி; வெற்றி பெறுவேன் என்னும் மனப்பான்மை உள்ளவர்-களாலேயே உயர்ந்த சமூகம் உருவாகிறது.
தன்னம்பிக்கை என்பது சுயநலமுமல்ல; அகங்காரமுமல்ல, அது பேரறிவு. கற்றல் எனும் கலை: கற்றுக் கொள்வது என்பது சிறந்த அனுபவம். சொந்த அனுபவத்திலிருந்து கற்றுக் கொள்பவர்கள் அறிவாளிகள். பிறருடைய அனுபவங்களைக் கொண்டு கற்றுக் கொள்பவர்கள் பேரறிவாளர்கள். அறிவைத் தேடுவது என்பதோடு நில்லாமல் ஒவ்வொரு நாளும் வாழ்க்கையில் அதைப் பயன்படுத்த வேண்டும். பயிற்சியே ஒருவனை முழுமைப்-படுத்துகிறது.
ஒரு விஷயத்ப் பற்றி நமக்குத் தெரியுமா? அல்லது முழுமையாகத் தெரியுமா? என்று கேட்டுப் பார்ப்போம். தெரியும் என்று சொன்னால் முழுமையாகத் தெரிந்துகொள்ள வேண்டியிருக்கிறது என்று பொருள். தெரியாதவற்றை தெரியாது என்று ஒப்புக் கொள்வது மேலும் கற்றுக் கொள்ளவே என்று அணுக வேண்டும்.நம்முடைய தேவை, ஆர்வம் தாண்டி உலகில் உள்ள எல்லாவற்றையும் கற்றுக் கொள்ள வேண்டும் என்று நினைப்பதும் தவறு. ஏற்கனவே நமக்குள் பதிவு செய்யப்-பட்டிருக்கிற விஷயங்களை தவறு என்று உணர்ந்து அதை அழித்துவிடுவதும் கற்றல்-தான். எனக்குத் தெரியாது என்று நினைப்பதற்கு மாறாக இன்னும் தெரிந்து கொள்ள வேண்டியிருக்கிறது என்று நினைக்கக் கற்றுக் கொள்ள வேண்டும். கற்றுக் கொள்ளத் தயாராக மனதை மாற்றி பார்வையை விரிவுபடுத்தினால் வாழ்க்கைப் பயணம் சுகமாகும்.
கவலைகளை வெல்லும் கலை:
கவலை என்றநோயை நீக்கும் மருந்து அல்லது கருவி உலகில் கண்டுபிடிக்கப்-படவில்லை.கவலை என்னும் பூதம் தொட்டில் முதல் சுடுகாடு வரை தொடர்கிறது. கவலை என்னும் அழுத்தத்தினால் மனிதன் செய்யாதது எது? கவலைக் கடலிலிருந்து மீளவிரும்பி போதை நெருப்பில் விழுந்துவிடுவது வேதனை, அதனால் அழிந்த நம்பிக்கைகளும் எதிர்ப்-பார்ப்புகளும் எத்தனை?சின்னச் சின்ன கவலைகளுக்கும் தொல்லை-களுக்கும் முக்கியத்துவம் அளித்து வாழ்க்-கையை வீணடிக்கலாமா? கவலை நோயின் முக்கிய பாதிப்பாகும்.
கவலை, மனச்சோர்வு, அதைரியம், பதற்றம் இவற்றுக்கு எதிர்ச்சொற்கள் நம்பிக்கை, துணிவு, உற்சாகம், அமைதி என்பதுதான். எதிரெதிர் சிந்தனைகள் ஒரே இடத்தில் இருக்க முடியாது. நேர்மறை நம்பிக்கைகளை விதைத்து அவநம்பிக்-கைகளை களையெடுக்கலாம்.வேலை கிடைக்காததால் கவலைப்பட்டுக் கொண்டு இருந்தார் ஒருவர். பெரும் முயற்சி-க்குப் பிறகு ஒரு வேலை கிடைத்தது. ஆனாலும் அவர் கவலையோடு இருந்தார் ஏன்? என்று கேட்டார் நண்பர். அதற்கு அவர் வெகு நாளைக்குப் பிறகு கிடைத்த வேலை ஒரு வேளை போய்விட்டால் என்ன செய்வதென்று கவலையாக இருக்கிறது என்றார். இவர்களுக்கு விடிவே இல்லை.
ஒரு முயற்சியில் வெற்றி கிடைத்தால் மகிழ்ச்சி. கிடைக்காவிட்டால் இன்னும் மகிழ்ச்சி என்று நினைக்க வேண்டும். ஏனென்-றால் நம்முடைய முயற்சி என்ற செயல் தொடர அதுவே வாய்ப்பாகுமே!
ஆளுமை என்னும் முகமூடி என்று இக்கட்டுரையின் தலைப்பு. எதிர்மறை எண்ணங்கள் எனும் மூடியை கழற்றி எறிந்து-விட்டு, நேர்மறை எண்ணங்களால் ஆன முகத்தை உலகுக்கு அறிமுகப்படுத்துங்கள்!

No comments: